ஷெய்த்தான் பிடித்குமா???
www.jawahirjamali.tk.com
ஜின்கள் நமது உடலில் புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது, அது தான் பேய் என்பது மற்றொரு சாரார் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்த குர்ஆன் வசனத்தை தருகிறார்கள்.
'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' (அல்குர்ஆன் 2:275)
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை விளக்கும் போது, ஷைத்தானின் தீண்டுதல் அல்லது ஷைத்தான் பிடித்தல் என்பது பைத்தியம் பிடித்தல் என்று சொன்னார்கள்.
அதாவது, 'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் பைத்தியம் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' என்பது பொருளாகும்.
ஜின்களாலும் பேய் பிடிக்க வாய்ப்பில்லை.
ஜின்களால் பாதிப்புக்கள்:
ஜின்களால் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் ஜின்கள் பற்றிய சந்தேகங்கள் முழுமையாக நீங்கும்.
ஷைத்தானின் தூண்டுதல்:
'ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அதுபோலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்: திர்மிதி)
இந்த ஹதீஸின் படி நம் உடலில் உள்ள ஷைத்தான் தவறைச் செய்யும்படி தூண்டுவான். அதே நேரம் வானவர் அந்த தவறைச் செய்யாதே என்ற விஷயத்தை மனதில் ஏற்படுத்துவார். இரண்டும் சரிசமமான தூண்டுதல்கள் தான். அந்தத் தவறை செய்வதும் செய்யாது விடுவதும் மனிதனின் விருப்பத்தைப் பொருத்தது.
மாறாக அந்த ஷைத்தான் அந்தத் தவறை செய்யும் படி மனிதனை வற்புறுத்த முடியாது. அந்த அளவுக்கு சக்தியும் அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.
தூண்டுதல் மட்டும் தான் இந்த ஷைத்தானின் வேலை.
சந்தேகத்தை உண்டாக்கும் ஷைத்தான்:
பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற தனது தோழர்களை அழைத்து இவர் எனது மனைவி இன்னார் என்று சொல்கிறார்கள். ஆச்சர்யப்பட்டுப் போன தனது தோழர்களிடம், 'ஷைத்தான் மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்' என்ற விஷயத்தை சொல்கிறார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது - ஹதீஸின் சுருக்கம்)
சந்தேகம் தன் மீது வந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
தொழுகையை கெடுக்கும் ஷைத்தான்:
ஷைத்தான் என் தொழுகையையும் ஓதுதலையும் குழப்பிக் கெடுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவன் கின்ஸப் என்ற ஷைத்தானாவான். அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உமது இடப்புறம் நீ மூன்று முறை துப்பு' என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன் அதை அல்லாஹ் என்னை விட்டும் நீக்கி விட்டான் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்).
மற்றொரு ஹதீஸில் தொழுகைக்காக தக்பீர் கட்டி விட்டால் ஷைத்தான் வந்து அதை நினைத்துப் பார், இதை நினைத்துப் பார் என்று சொல்லி தொழுகையை கெடுப்பான் என்று வந்துள்ளது.
தொழுகையை ஷைத்தான் கெடுப்பான், ஆனால் பேய் பிடிக்க வைக்க முடியாது.
வழிகெடுக்கும் ஷைத்தான்:
'உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நான் அவர்கள் யாவரையும் நிச்சயமாக வழிகெடுப்பேன் என்று இப்லீஸ் கூறினான், எனினும் அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள உன் அடியார்களைத் தவிர என்றான்' (அல்குர்ஆன் 38:82,83)
இக்லாஸ் எனும் உள்ளத்தூய்மை இல்லாதவர்களை ஷைத்தான் எளிதில் வழிகெடுத்து விடுவான் என்று இந்த குர்ஆன் வசனம் கூறுகிறது.
ஜோதிடர்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஜோதிடர்கள் கூறுவதில் சில உண்மைகள் உள்ளதே! எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்படி உண்மையென ஒன்றை நம்ப வைத்து நூறு பொய்களை மிகைப்படுத்திச் சொல்வார்கள். இது ஷைத்தானின் விளையாட்டாகும் என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
ஜோதிடர்கள் உண்மைகளை அறிய முடியாத அளவிற்கு அல்லாஹ் எரிநட்சத்திரங்களை வானத்தில் ஏற்பாடு செய்து வைத்து ஜின்களுக்கு தடையை ஏற்படுத்தி விட்டான். இனிமேல் ஜோதிடர்கள் வானத்திலிருந்து கிடைக்கும் செய்தியை அறிந்து கொள்ள முடியாது.
மொத்தத்தில் இஸ்லாத்தோடு தொடர்பில்லாத அதன் சட்டதிட்டங்களை அறிந்திராதவர்களின் மனங்களை ஷைத்தான் ஆக்கிரமிப்பு செய்வான். அவர்களை படாதபாடு படுத்துவான் என்பதை ஒருவரியில் சொல்ல முடியும்.
தீய ஜின்களிலிருந்து பாதுகாப்பு:
1. 'உங்களுக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மை தூண்டுமாயின் உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக' (அல்குர்ஆன் 41:36)
2. 'நீர் கூறுவீராக! என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகின்றேன்' (அல்குர்ஆன் 23:97)
3. 'நீங்கள் இரவில் நாய் ஊளையிடுவதைக் கேட்டால், கழுதை கத்துவதைக் கேட்டால் அவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் அவை நீங்கள் காணாத (கெட்ட)வைகளைக் காண்கின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)
4. 'ஆயத்துல் குர்ஸி' (2:255) வசனத்தையும் சூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) ஓதினால் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். (நூல்: புகாரி)
'ஆயத்துல் குர்ஸி' வசனத்தை எவர் காலைப் பொழுதை அடையும் போது கூறினாரோ அவர் மாலைப்பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார். இன்னும் மாலையில் அதை எவர் கூறினாரோ அவர் காலைப் பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாக்கிம், தப்ரானி)
5. நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானை விட்டும் மனித கண்ணை விட்டும் (பல வகைகளில்) பாதுகாப்புத் தேடிவந்தார்கள். ஃபலக், நாஸ் (அத்தியாயம்- 113,114) அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா)
நகரங்கள்:
ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது ஊர்களில் வசிக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸ் உள்ளது.
'...நஸீபைனிலிருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
இங்கே நஸீபைன் என்பது ஒர் ஊரையோ அல்லது இடத்தையோ குறிக்கும்.
குப்பை கொட்டும் இடங்கள்:
'...அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புகள் உங்களின் உணவாக இருக்கின்றன. இறைச்சி நிறைந்ததாக அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.' என்று ஜின்கள் தங்களது உணவு எது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்: முஸ்லிம்- 903)
கழிப்பிடங்கள்:
எலும்புகளாலும் கால்நடைகளின் விட்டைகளாலும் சுத்தம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்- 504)
ஜின்களின் இருப்பிடமாக கழிப்பிடங்கள் இருப்பதால் ஒரு துஆவை ஓதும் படி நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹுப்தீ வல் ஹபாஇத்' - (பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) (நூல்: முஸ்லிம்- 729, திர்மிதி- 6)
ஒட்டகங்கள் கட்டுமிடங்கள்:
'ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாம், அது ஷைத்தான் குடியிருக்கும் இடமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்பர்ரா இப்னு ஆஸிப் (ரலி), நூல்: அபூதாவூது)
ஷைத்தான் என்பது கெட்ட ஜின்களைக் குறிக்கும் சொல்லாகும்.
'அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்' (அல்குர்ஆன் 18:50)
மண்ணறைகள்:
மண்ணறைகளிலும் கழிப்பறைகளிலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது' நபிமொழி (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூது)
மண்ணறைகளில் தொழுவது சிலை வணக்கத்தை ஒத்ததாக இருக்கும் அதேவேளை அங்கே ஜின்களும் குடியிருக்கிறார்கள் என்பதனாலேயே கழிப்பறையும் சேர்த்தே இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
காற்று மண்டலம்:
ஜின்கள் மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுவது அதன் பறக்கும் சக்தியாகும். அவை முதல் வானம் வரை பறந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
'நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம் அது கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்' என்று ஜின்கள் கூறின. (அல்குர்ஆன் 72:8)
தெருக்கள்:
'(மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள், அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம்)
திறந்த வெளி:
'...(சிறுநீர் கழித்த பின்) சுத்தம் செய்வதற்காக சிறுகற்களை எடுத்துக் கொள்ளும், விட்டைகளையும் எலும்புகளையும் எடுக்காதீர்...' என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
அடர்ந்த காடுகள்:
(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர், 'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது- 6)
இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
குளியலறைகள்:
ஒரு மனிதன் அவனுடைய குளிக்குமிடத்தில் சிறுநீர் கழித்திட நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். வஸ்வாஸ் (எனும் மன ஊசலாட்டம்) இதனால் தான் ஏற்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி), நூல்: அபூதாவூது 27, திர்மிதி 21, இப்னுமாஜா, நஸயீ, அஹ்மத்)
குளியலறையும் அடக்கத்தலத்தையும் தவிர நிலப்பரப்பு முழுவதும் தொழுமிடமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: திர்மிதி 316)
பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
பொந்துகள்:
பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள். பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூதாவூது 29)
Share your views...
0 Respones to "ஷெய்த்தான் பிடித்குமா???"
Post a Comment