ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியும்???



www.jawahirjamali.tk.com

ஹஜ்ஜு அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா ?ஹதீஸைக் குறிப்பிடவும்

பதில் :

ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழ முடியும். இதைத் தவிர உள்ள மற்ற அனைத்துப் பயணங்களிலும் தொழுகையை நான்காகத் தான் நிறைவேற்ற வேண்டும் என்று ஹனஃபீ மத்ஹப் நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தீர்ப்பு குர்ஆன் வசனத்துக்கும் பல நபிமொழிகளுக்கும் எதிராக அமைந்துள்ளது. ஹஜ் பயணம் மட்டுமின்றி பொதுவாக ஒருவர் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களிலும் பயணத்துக்கான காரணம் எதுவாக இரந்தாலும் அவர் தனது பயணத்தில் சுருக்கித் தொழலாம் என்றே மார்க்கம் கூறுகின்றது. இவர்கள் கூறுவது போன்று ஹஜ் பயணத்தில் மட்டும் தான் இச்சட்டம் என மார்க்கம் வேறுபடுத்தவில்லை. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنْ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمْ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا(101)4

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

அல்குர்ஆன் (4 : 101)

பொதுவாக பூமியில் பயணம் மேற்கொண்டால் இச்சலுகை பயணம் செய்வருக்கு உண்டு என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ள பின்வரும் செய்தியும் இதையே உறுதிப்படுத்துகின்றது.

1108 -عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنْ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمْ الَّذِينَ كَفَرُوا فَقَدْ أَمِنَ النَّاسُ فَقَالَ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا- رواه مسلم

யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறை மறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும் போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை'' (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே? என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது "(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

முஸ்லிம் (1222)

அனைத்துப் பயணங்களுக்கும் இச்சலுகை பொருந்தும் என்றே பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

1109 -حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَبُو الرَّبِيعِ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ اللَّهُ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً- روا ه مسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும் போது நான்கு ரக்அத்களாகவும், பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்."

முஸ்லிம் (1223)

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்தை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் (1230)

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் அன்றி வேறு பயணம் செய்தவர்களுக்கும் இச்சலுகையை வழங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

2233 -أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ عَنْ أَبِيهِ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا تَنْتَظِرُ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ قُلْتُ إِنِّي صَائِمٌ فَقَالَ تَعَالَ أُخْبِرْكَ عَنْ الْمُسَافِرِ إِنَّ اللَّهَ وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ- رواه النسائي

அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ;

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகை தந்தேன். அவர்கள் என்னிடம் அபூ உமய்யாவே காலை உணவு உமக்குத் தேவையில்லையா? என்று கேட்டார்கள். நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் எனப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் பயணியைப் பற்றி(ய சட்டத்தை) உனக்கு நான் விவரிக்கின்றேன். பயணத்தில் உள்ளவர் நோன்பை விடுவதற்கும் தொழுகையில் பாதியைக் குறைத்து (சுருக்கி)த் தொழுவதற்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.

நஸாயீ (2233)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த நபித்தோழர் நபியவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவிற்கு வருகிறார். இவருக்கு தொழுகையைச் சுருக்கித் தொழ அனுமதியுண்டு என்ற விபரத்தை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போர்ப் பயணங்களில் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

1046 -حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ قَالَ أَبُو دَاوُد غَيْرُ مَعْمَرٍ يُرْسِلُهُ لَا يُسْنِدُهُ- رواه أبو داود

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கியிருந்த போது (நான்கு ரக்அத்) தொழுகையை (இரண்டு ரக்அத்களாக) சுருக்கித் தொழுதார்கள்.

அபூதாவுத் (1046)

1042 -حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ عَامَ الْفَتْحِ خَمْسَ عَشْرَةَ يَقْصُرُ الصَّلَاةَ قَالَ أَبُو دَاوُد رَوَى هَذَا الْحَدِيثَ عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَأَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ وَسَلَمَةُ بْنُ الْفَضْلِ عَنْ أَبِي إِسْحَقَ لَمْ يَذْكُرُوا فِيهِ ابْنَ عَبَّاسٍ -رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தர்கள். அப்போது அவர்கள் சுருக்கித் தொழுதார்கள்.

அபூதாவுத் (1042)

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொள்வதற்காக செல்கிறார்கள். நபியவர்கள் ஹஜ் செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. ஆயினும் மக்காவில் தங்கியிருந்த நாட்களில் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள்.

எனவே பொதுவாக அனைத்துப் பயணங்களிலும் இச்சலுகையை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகின்றது. ஹஜ் பயணத்திலும் இச்சலுகையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)

நூல் முஸ்லிம் (2268?), அபூதாவூத் (1646), அஹ்மத் (4659)

எனவே ஹஜ் பயணம் உட்பட எல்லாப் பயணங்களுக்கும் இச்சலுகை உரியதாகும். ஹஜ் பயணத்துக்கு மட்டும் உரியது எனக் கூறுவது குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிரான கூற்றாகும்.




Share your views...

0 Respones to "ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியும்???"

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed