மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்.






மிஃராஜ் என்பது

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.வேறு எந்த மனிதருக்கும் ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளை காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.(17.1).

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.

ஒரே இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே.

மிஃராஜ் நடந்தது எப்போது.?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனா். இதற்கு சரியான ஆதாரம் குர் ஆனிலும் ஹதீஸிலும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவற்கு சுமார் 10 வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியா் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடை பெற்றதாக ஸுஹ்ரி அறிவிப்பதாக பைஹகியில் இடம் பெற்றுள்ளது.

ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாகக்கப்ப்டுள்ளது. எனவே துல்கஃதா மாதத்தில்தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.

உர்வா.ஸூஹ்ரி ஆகியோர் ரபீயுனில் அவ்வல் மாதம் நடைபெற்றதாக கூறுகின்றனர்.

யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 12 ல் மிஃராஜ் நடை பெற்றது என்று ஜாபிர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்.ரஜப் மாதம் 27 ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸூருருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜூம்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணம் எந்த ஆண்டு எந்த மாதத்தில் எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குா் ஆன் மற்றும் ஆதாரபுர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை இல்லை. கியாம நாள் மட்டும் இல்லை.

இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கதீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள்.

ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை.

நபி (ஸல்) அவர்களோ நபித்தோழா்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்க வில்லை அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்.

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்.

எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல் வேறு பித்அத்களைச் செய்து வருகின்றனா்.

ரஜப் 27 ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு அந்த இரவு மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனா்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக் கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி பூமிக்கு இறங்கி ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனா். என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் பொய்யான ரீல்களை எழுதி வைத்துள்ளனா்.

இதனால் சிறப்புத் தொழுகைகள் சிறப்பு நோன்புகள் உம்ராக்கள் தர்மங்கள் பித்அத்தான காரியங்களான ராத்திப் மஸ்லிஸ்கள் மவ்லிது வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றனா்.

அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனா். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்தியேகமாக இந்த இரவுக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.

அதிலும் வழமையான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கித் தொழுவதுதான் இதில் வேதனைக்குரிய விஷயம்.

மிஃராஜ் தொழுகையின் முறை.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத்கள் தொழ வேண்டும் அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹூவல்லாஹ் சூராவை ஓத வேண்டும். 3ம் கலிமா 100 தடவையும் இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும் ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹூவல்லாஹ் சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும் அதில் அலம் தர கைஃபவும் லிஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத்தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி இதைத் தொழுதால் ஏராலமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனா்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனா்.இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேற்பவர்களும் எம்மில் உள்ளனா். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்து விட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா???

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே?

அறிவிப்பவர்.ஆயிஷா (ரலி).நூல்.புஹாரி-(2697).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர்.ஆயிஷா (ரலி).நூல்.முஸ்லிம்-(3243).

இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக்கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?(49.16).

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தை கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை நம்பி. அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக.




Share your views...

0 Respones to "மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்."

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed