அதான் ஓர் ஆய்வு.
வன்னியின் அழைப்பாளன்.k.m.jawahir jamali.
பெண்கள்-ஆண்கள் பாங்கு இகாமத் சொல்லித்தான் தொழ வேண்டுமா?
தெளிவு : பொதுவாக பாங்கு, இகாமத் சொல்லாவிட்டாலும் தொழுகை நிறைவேறிவிடும். ஆனால் பாங்கு வீட்டில் மட்டுமின்றி வேறு எந்த இடங்களிலும் தனியாகவோ, கூட்டாகவோ, ஆணோ, பெண்ணோ தொழுதாலும் கூறுவது அவசியமே.
இதுபற்றி அஸ்மா பின்த்யஜீத்(ரழி) , அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) இவ்விருவரின் வாயிலாக பெண்களுக்கு பாங்கும், இகாமத்தும் இல்லை என்று ஒரு அறிவிப்பைக் காணுகிறோம். அந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றுள்ள “உபைத்துல்லாஹ்” என்பவர் முஹத்திஸீன் (ஹதீஸ் கலை வல்லுனர்) களிடத்தில் நம்பகமற்ற கருதப்படுவதால் அவ்வறிவிப்பு பலஹீனமான ஹதீஸ்களின் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
ஹதீஸ் தொகுப்பாளர் அபூதாவூத்(ரஹ்) என்பவர்கள் இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்கள். அதாவது, நான் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்களிடத்தில் பெண்களுக்கு பாங்கு, இகாமத் உண்டா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் இவ்வாறே இப்னு உமர்(ரஹ்) அவர்களிடத்தில் பெண்களுக்கு பாங்கு இகாமத் உண்டா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “அல்லாஹ்வை நினைவு கூறப்படும் அந்த புனிதமான வாக்கியங்களை (எவ்வித ஆதாரமுமின்றி) நான் எவ்வாறு கூறவேண்டாம் என்று சொல்ல முடியும்? என்றார்கள்.
ஆகவே இப்னு உமர்(ரழி) அவர்களின் இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு பெண்களுக்கும் பாங்கு இகாமத் உண்டு என்று கூறினார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்துர்(ரழி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களைக் கற்றுக் கொடுத்து இவ்வாறுதான் (தொழுகைகளுக்கு முன்) நீங்கள் பாங்கு சொல்லிக் கொள்ள வேண்டும் என்று ஏவினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஹ்துர்(ரழி) நூல் : முஸ்லிம்
மூன்று நபர்கள் ஒரு இடத்தில் இருந்துகொண்டு அவர்கள் பாங்கு சொல்லாமலும், தொழாமலும் இருப்பார்களேயாயின் , நிச்சயமாக ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்று விட்டான் என்று உணர்ந்து கொள்ளுங்கள். அறிவிப்பவர் : அபூதர்தாஃ(ரழி) நூல் : முஸ்னத் அஹ்மத்
ஒரு மலையின் மேற்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் பாங்கு சொல்லித்தொழும் பொழுது உங்களிறைவன் மிக சந்தோசம் அடைவதோடு (மலக்குகளைப் பார்த்து) இதோ எனது இவ்வடியான் என்னை பயந்து பாங்கு சொல்லி தொழுவதைப் பாருங்கள். அவனது பாவங்களை மன்னிப்பதோடு, அவனை சுவர்க்கதிலும் புகுத்துவேன் என்று கூறுகிறான்.
அறிவிப்பவர் : உர்பக்து பின் ஆமீர் நூல்கள் : அபூதாவூத், நஸயீ
எனவே, மேற்கண்ட மூன்று ஹதீஸ்களின் வாயிலாக நபி(ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும்படி ஏவியிருப்பதையும் பாங்கு, தொழுகை, இல்லாதவர்களின் மீது ஸைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுவான் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதையும் ஆதாரமாகக் கொண்டு ஆண்களைப் போன்றே பெண்களும் பாங்கு இகாமத் சொல்ல வேண்டும் என்பதை உணருகிறோம். (ஆனால், பெண்கள் மெதுவாக பாங்கு இகாமத் சொல்லிக் கொள்ள வேண்டும்)
Share your views...
0 Respones to "அதான் ஓர் ஆய்வு."
Post a Comment