அந்நிய கலாச்சார ஊடுருவல் எங்கு ஊட்டப்படுகிறது?
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்
ஜவாஹிர் (ஜமாலி)
இன்று அநேகமான முஸ்லிம் பெற்றோர் தம் பிள்ளைகளைத் தரமான பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு தம்மாலான சகல முயற்சிகளையும் எடுக்கின்றனர். இது பாராட்டுக்குரிய விடயம் தான் ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இவ்வுலகத்தை மாத்திரம் அடிப்படையாக வைத்து தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தன் பிள்ளை ஒழுக்கமுள்ள, அறிவுள்ள பிள்ளையாக வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பாடசாலைகளைத் தெரிவு செய்கிறார்கள். தன் பிள்ளை மார்க்கத்தோடும் வளர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களைக் காண்பது அரிதிலும் அரிது.
முஸ்லிம்களுக்கு தனிச்சலுகை
“நாம் மார்க்கத்தோடு தானே இருக்கிறோம் பிள்ளை எந்த பாடசாலையில் கற்றால் என்ன?” என்று சிலர் நினைக்கலாம். இது முற்றிலும் தவறு. அல்லாஹ்வின் மிகப் பெருங்கிருபையால் இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றே தனியாக பாடசாலைகள் பல உள்ளன. அதுவும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில் சீருடை, ஜும்ஆவுக்கு சமூகமளிக்க சலுகை, நோன்பு காலத்தில் விடுமுறை என்று அரசாங்கம் நமக்கு இத்தனை வசதியளித்துள்ளது.
இவ்வளவு சலுகைகளை பெற்ற நாம் அந்நிய மத பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்து அங்கு நமது மார்க்க விடயங்களில் ஏதும் தடை விதிக்கப்படும் போது கொதித்து எழுகின்றோம். ஏன் இந்த வேண்டாத வேலை? ஆனாலும் அங்கு விதிக்கப்படும் தடைகளுக்கு தலைபணிந்து பொறுத்துப் போகின்றனர் பலர். சில அந்நிய மத பாடசாலைகளில் முஸ்லிம்களுக்குரிய ஆடை அணிய தடை விதித்தாலும் அதற்கேற்றாற் போல் அவர்களோடு சேர்ந்து ஒத்துப் போகின்றனர்.
எல்லாம் எதற்காக? இவ்வுலகக் கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக! இங்கு ஏற்படுத்தப்படுகின்ற பழக்கவழக்கங்கள் தான் பிள்ளைகளுக்கு மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்க உதவி புரிகின்றது. காரணம் ஆரம்பத்திலேயே தலை சாய்க்க கற்றுக் கொடுத்து விட்டோம். அது மட்டுமல்லாது அந்நிய மதத்தவரின் சமய நிகழ்ச்சிகள், பண்டிகைகளிலும் சிறு வயது முதல் பங்கேற்கின்றனர். பெற்றோரும் சேர்ந்தே இதற்கு உடந்தையாகின்றனர்.
மொத்தத்தில் உடை, நடை, பாவனை யாவுமே அந்நிய கலாச்சார மோகத்தின் பால் அமைந்து ஈருலக வாழ்வும் எந்த வித பிரயோசனமும் அற்று போகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாறோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவூத் (3512)
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.(புகாரி-3456)
எமக்கென்று தனி வழியும் வசதிகளும் காணப்படுகின்ற போது ஏன் நமது தனித்தன்மையை இழக்க வேண்டும்? மேலைத்தேய நாடுகளில் நமது மார்க்கத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் போடப்பட்டால் அதற்கு அந்நாட்டு முஸ்லிம்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் நம் நாட்டு முஸ்லிம்களுக்கு எந்த வித போராட்டமும் இல்லாமல் கிடைத்த சலுகைகளை பயன்படுத்துவதற்கும், இஸ்லாம் மார்க்கத்தின் வழி நடப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் தாராளமாக இருக்கும் போது அதனை நழுவ விடலாமா? ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
முஸ்லிம் பெற்றோரின் ஏக்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொடுபோக்கும்
தரமான பாடசாலை இல்லாததனாலும், போதிய ஆசிரியர் பற்றாக்குறையாலும் தான் நாம் அந்நிய மத பாடசாலைகளை நாடுகிறோம் என்பது எம் பெற்றோரின் ஏக்கமாகும். ஆனால் சமூக அக்கறையுள்ள எவரும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கும் மேலாக எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் தனது முன்னேற்றத்தை கவனத்தில் கொள்வதே தவிர சமூக முன்னேற்றத்தை பற்றி அணுவளவும் கவலை கொள்வதும் கிடையாது. இதற்காக எல்லோரும் அல்லாஹ்வின் திருப்தியையும் கூலியையும் நாடியவர்களாக எம் சமூகத்தை கட்டியெழுப்ப முன் வர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "அந்நிய கலாச்சார ஊடுருவல் எங்கு ஊட்டப்படுகிறது?"
Post a Comment