நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
k.m.jawahir jamali.
"நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் இங்கே (திருக்குர்ஆன் 3:81) கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.
ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.
நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் உறுதி மொழி எடுத்திருக்கும் போது, இது நபிகள் நாயகத்தின் வருகை பற்றிய முன்னறிவிப்பாக இருக்க முடியாது.
நபிமார்களிடம் எடுத்த இந்த உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடங்க மாட்டார்கள் என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தெளிவுபடுத்தியிருப்பார்கள்.
உம்மைத் தவிர மற்ற நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்தோம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உறுதி மொழியையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.
அடுத்ததாக, என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கை.
"உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்' என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரக் கூடிய ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும்.
அவ்வாறு கூறாமல், "உங்களிடம் ஒரு நபி வந்தால்..' என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.
"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.
இது நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகி விடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் நிபந்தனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.
நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனை யின் அடிப்படையில் இதை வழங்கு கிறேன் என்பது தான் உடன்படிக்கை.
1. உங்களிடம் அவர் வந்தால்
2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்
3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்
ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்க பலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப் பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கு இதில் சான்று ஏதுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனத்தைத் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.
"நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரக் கூடிய நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்' என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலே நாம் அளித்துள்ள விளக்கமே இவர்களுக்குப் போதிய மறுப்பாக அமைந்துள்ளது.
"உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்' என்று கூறாமல், "ஜாஅகும் - உங்களிடம் ஒரு நபி வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.
ஒரு நபி வாழும் போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும் போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to " "
Post a Comment