நின்று கொண்டு உளூச் செய்தல்???
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் (ஜமாலி)
நின்று கொண்டு உளூச் செய்யக் கூடாது என்று சிலர் கருதுகின்றனர். நின்று கொண்டு உளூச் செய்யக் கூடாது என்று குர்ஆனிலோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலோ எந்தத் தடையும் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உளூச் செய்தார்கள் என்பதற்கு நேரடியான சான்றுகளும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், எனது தாயாரின் சகோதரியுமான மைமூனா (ர-) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கினேன். அப்போது தலையணையின் அகல வாக்கில் நானும் நீள வாக்கில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் படுத்துக் கொண்டோம்.
பாதி இரவு வரை நபிகள் நாயகம் (ஸல்) உறங்கி விட்டு விழித்தனர். தமது முகத்தி-ருந்து தூக்க(க் கலக்க)த்தை தம் கையால் தடவி (நீக்கி) விட்டு, ஆலு இம்ரான் அத்தியாயத்தின் கடைசி பத்து வசனங்களை ஓதினார்கள்.
பின்னர், தொங்க விடப்பட்ட தோளால் ஆன தண்ணீர் பாத்திரத்தின் அருகில் நின்று அதில் உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்களைப் போலவே செய்து விட்டு அவர்களின் (இடது) விலாப்புறத்தில் நின்றேன்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தை என் தலை மீது வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பி (வலது பக்கம் நிறுத்தி)னார்கள். இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டுப் பின்னர் வித்ரு தொழுதார்கள்.
பின்னர் முஅத்தின் வரும் வரை ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டனர். பின்னர் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி - 183, 138, 859, 992, 1198, 4571, 4572..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உளூச் செய்தார்கள் என்று தெளிவாகவே மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளதால் நின்று கொண்டு உளூச் செய்வதால் எந்தக் குறைவும் ஏற்படாது என்பதை அறியலாம்.
செருப்பணிந்து உளூச் செய்தல்.
உளூச் செய்யும் போது செருப்பைக் கழற்றி விட வேண்டும் என்றும் செருப்பணிந்து உளூச் செய்யக் கூடாது என்றும் சிலர் தவறாக எண்ணுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பணிந்து உளூச் செய்திருக்கின்றார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி - 166, 5851.
ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
வீட்டில் உளூச் செய்தல்.
வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) உளூச் செய்தார்கள். அதை அழகிய முறையில் செய்தார்கள். பின்னர், "யார் இதுபோல் உளூச் செய்து விட்டுப் பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு அமர்கின்றாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி புகாரியின் - 6433. வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து முஸ்லிம் - 340. வது ஹதீஸிலும் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமில் - 336. வது ஹதீஸில் "அவரது தொழுகையும் அவர் நடந்து சென்றதும் உபரி வணக்கமாக அமையும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
பள்ளிவாசளில் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்.
வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு பள்ளிவாசளின் சார்பில் வசதிகள் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.
"தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயலாமல் இருந்தது. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்'' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். "(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?'' என்று அவர்களிடம் நான் கேட்டேன். எண்பது 80 பேர்கள் என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
என்று ஹுமைத் கூறுகின்றார்.
இந்த நிகழ்ச்சி புகாரியின் 3575வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறர் உதவியுடன் உளூச் செய்தல்.
நமது கைகளால் தண்ணீர் எடுத்து உளூச் செய்வது போல் மற்றவர்களை ஊற்றச் செய்து உளூச் செய்வதற்கும் அனுமதி உள்ளது.
உஸாமா (ர-) அவர்கள் தண்ணீர் ஊற்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்ததாக புகாரியின் - 181, 1670. ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
முகீரா பின் ஷுஅபா (ர-) அவர்கள் தண்ணீர் ஊற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்ததாக புகாரியின் - 182, 203, 363. ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
எனவே ஒருவர் தண்ணீர் ஊற்ற மற்றவர் உளூச் செய்வதில் எந்தக் குற்றமும் இல்லை.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்தல்.
உளூச் செய்வதற்காக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் உளூச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக உளூச் செய்து வந்தனர் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது புகாரியில் - 193.வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் கூறுவது என்னவென்பது மிகத் தெளிவாக இருந்தும் இதற்குப் பலவிதமான விளக்கங்களை சிலர் கூறி திசை திருப்பியுள்ளனர். இதற்கு வேறு எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்களும், பெண்களும் ஒரு பாத்திரத்தில் எங்கள் கைகளைப் பாத்திரத்தினுள் விட்டு உளூச் செய்து வந்தோம் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூதில் - 73. வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
திர்மிதி - 59, நஸயீ - 341. ஆகிய ஹதீஸ்களிலும், மற்றும் சில ஹதீஸ்களிலும் பெண்கள் உளூச் செய்து விட்டு, மீதம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ்களும் நம்பத்தகுந்தவர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முன்னர் இவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டு பின்னர் தடுக்கப்பட்டு விட்டது என்று சிலர் காரணம் கூறி ஆண்களும், பெண்களும் சேர்ந்து உளூச் செய்யலாம் என்ற ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.
தடை செய்யும் ஹதீஸ்கள் அனுமதிக்கும் ஹதீஸ்களை மாற்றி விட்டது என்று கூறும் இவர்கள் ஏற்கத் தக்க எந்தக் காரணத்தையும் கூறாமல் இவ்வாறு கூறுகின்றனர். எனவே இவர்களின் வாதத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.
முதலில் தான் தடை செய்யப்பட்டிருந்தது, பின்னர் அத்தடை நீக்கப்பட்டு ஒரே இடத்தில் உளூச் செய்ய அனுமதிக்கப் பட்டனர் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க காரணத்தையும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரே இடத்தில் உளூச் செய்து வந்தோம் என்ற சொற்றொடர், நபிகள் நாயகம் அவர்களின் இறுதிக் காலம் வரை இதுவே நடைமுறையாக இருந்தது என்பதையே காட்டுகின்றது.
கடமையான குளிப்பின் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் குளிப்பவர்களாக இருந்தோம் என்று ஆயிஷா (ரலி) கூறுவதும் (புகாரி - 263, 264, 301, 322) இதுவே கடைசி வரை வழக்கமாக இருந்துள்ளது என்ற கருத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இது முன்னர் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தடை செய்யப்பட்டிருந்தால் செய்து வந்தோம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
ஆரம்பத்தில் இவ்வாறு செய்து வந்தோம், பின்னர் தடுக்கப்பட்டு விட்டது என்று தான் கூறியிருப்பார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலம் வரை ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யும் வழக்கம் இருந்து வந்தது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
ஏற்கத்தக்க காரணத்துடன் இவ்வாதம் அமைந்துள்ளதால் இதுவே சரியானதாகத் தெரிகின்றது.
உளூச் செய்யும் முறை.
நிய்யத் எனும் எண்ணம்
முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார். ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை. நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்து விதிகளையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்வதாக அவருக்கு எண்ணம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
"அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி)
நூல் : புகாரி - 01, 54, 2529, 3898, 5070, 6689, 6953...
நிய்யத் என்பதை தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். அரபு மொழியில் குறிப்பிட்ட வார்த்தைகளை வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உளூச் செய்தல், தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டு செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது அவசியம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நின்று கொண்டு உளூச் செய்தல்???"
Post a Comment