கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் !



கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் !
k,m.jawahir (jamali)

‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.

அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன்.

‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.
இத்தகைய வலிகளைச் சுமந்து கொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயாருமில்லர். யாழ் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா பாடசாலையில் வாழ்ந்து வரும் மக்கள்தான்.

மத்ரஷா பாடசாலை. இவ் அகதிமுகாமானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வரவேற்கும். இருபத்தியிரண்டு வருடங்களின் பின் மீளக்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், பாவனையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள், நேரம் தவறாமல் பிரார்த்தனை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ, அமைதியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்.

இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் சிலர் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். பதினைந்து குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது எட்டு குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை மாணவர்கள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ்கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.

மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது சமையலறையாகவும் படுக்கையறையாகவும் பொருட்கள் வைத்தெடுக்கும் அறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதாமல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது எதிர்காலம், நடைமுறை வாழ்க்கை போன்றவற்றை சிந்தித்தே இம்மக்களுடைய வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

மத்ரஷா பாடசாலை முகாம் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக இங்கு சென்றபோது என் கண்ணிற்தென்பட்ட பாடசாலை மாணவனான றொஷானிடம் முகாம் பற்றிக் கேட்டேன் “நான் மன்னார்லயிருந்து வந்திருக்கன். தரம் ஏழு படிக்கிறன். முதல்ல மன்னார்ல படிச்சிட்டு இப்ப இங்க வந்து படிக்கிறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு.

நான் நல்லா ஸ்போட்ஸ் செய்வன். நல்லாப் படிப்பன். ப்ரண்ட்ஸை விட்டுட்டு வந்தது கவலையா இருக்கு. இங்க வசதியே இல்ல. வசதி கொஞ்சம் செஞ்சி தந்தரணும் எண்டு எதிர்பார்க்கிறன் என்றான் ஏக்கத் தொனியில்.
இவை பற்றிய மேலதிக தகவலைப் பெறும் நோக்கில் அங்கிருந்த குடும்பத் தலைவியான சலீம் மரினியாவிடம் முகாம் வாழ்க்கை பற்றிக் கேட்டேன். “போன மார்கழில இங்க வந்தம். உடன வெளிக்கிட்டு வாங்க என்று சொன்னத நம்பித்தான் வந்தனாங்க. வந்து மத்ரஷா ஸ்கூல்ல இருந்தம்.

ஒன்னுமே நடக்கல.1990ல் யாழ்ப்பாணத்தில இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு அகதியாப் போனம். இப்ப அங்கயிருந்து அதே அகதியா இங்க வந்திருக்கிறம். புத்தளத்துலயும் எங்களுக்குச் சொந்த நிலம் இல்ல. இங்க இருக்கிறவங்க கணவன் இல்லாமத்தான் இருக்கிறாங்க. அதால குடும்பத் தலைவிங்கதான் உழைக்க வேணும்.

என் குடும்பத்த காப்பாத்த என்னால உழைக்க முடியாத அளவிற்கு எனக்கு நெஞ்சில வருத்தம். இதுவரைக்கும் ஒரு நிவாரண உதவியும் எங்களுக்கு கிடைக்கல. பாக்கிஸ்தான்ல இருந்தெல்லாம் வந்தாங்க. இந்துக் குருக்கள் வந்தாரு. கிறிஸ்தவ மதகுரு வந்தாரு. பௌத்த பிக்கு வந்தாரு. யாரும் ஒன்னுமே பண்ணல. பு.யு அம்மா வந்தாங்க. நம்ம கஸ்டங்கள சொன்னம். அதுக்குப்பிறகு முத்திரை தந்தாங்க. சுபையா சேர்தான் கழிப்பிட வசதியும் குடிதண்ணி வசதியும் செஞ்சி தந்தாரு” என்ற அவரது கண்களில் கண்ணிர் வடிந்தது.

மேலும் தொடர்ந்தார் “இத்தனை காலமும் கொட்டிலா இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம். இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக்கூட முடியல.பிள்ளைக்கு ஒன்பது வயது. ஒஸ்மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மாதான் கடல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க.

வயதான காலத்துல நான்தான் அவங்கள கவனிக்கனும். ஆனா இந்த வயதிலும் உம்மா ஒழைச்சு எங்கள கவனிக்க வேண்டியிருக்கு” என்று சேலைத்தலைப்பால் கண்ணிரைத் துடைத்தார். வலி, வேதனை, துன்பம், இழப்பு, கண்ணீர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும் போது மனம் வேதனையால் துடித்தது.

“நான் வந்து ஏழு மாதமாச்சு. புத்தளத்துல இருந்துதான் வந்தனான். இங்க மக கூட இருக்கிறன். கணவரை இழந்துட்டன். வருமானம் இல்ல. ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன்.எல்லாரும் வாறாங்க. போறாங்க. போட்டோ பிடிக்கத்தான் வருவானுங்க.

ஒன்னும் தரமாட்டாங்க. நாங்க பெரிசா ஒன்னும் கேட்கல. எங்கட குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத்துக்கு ஒரு தொழில். அவ்வளவும்தான் கேட்டம். இனியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாற்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார்.

இத்தகைய அவல நிலைகளிற்கு முன்னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம் வளப்பற்றாக்குறை குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம் யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டுகின்றார் இப்பகுதிக்கான கிராம சேவகர் க.செல்வகுமார்.

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறிருக்கையில் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமது அகதி வாழ்வுக்கு ஒர விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷா முகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவெண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வழிவகைகளைச் செய்யவேண்டும்…!!!
நன்றி: இருக்கிறம்




Share your views...

0 Respones to "கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் !"

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed