துரோகத்தில் தோன்றிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம்.
ஜவாஹிர் (ஜமாலி)
அன்பர்களின் கவனத்திற்கு:
இக்கட்டுரை யூத நஸாறாக்களின் நூற்களைத் தழுவியோ அல்லது இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் வழிகேடு எனக் கூறும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் நூற்களை மேற்கோள் காட்டியோ அல்லது நடுநிலையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாககொண்டோ எழுதப்படவில்லை. மாறாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா அவர்களால் எழுதப்பட்ட அவரது சுயசரிதையான ‘ முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா ‘ (பிரச்சாரத்தினதும் பிரச்சாரகனினதும் நாட்குறிப்பு) எனும் நூலை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.!!!
அறிந்தவை…….
‘இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் உலகளாவிய இயக்கம். முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஜனரஞ்சகமான இயக்கம். முஸ்லிம் சமூகத்தில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க பாடுபடும் ஓர் இயக்கம். இவ்வியக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டது’ என்பன போன்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய மேலோட்டமான விடயங்களையே எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.
அறியவேண்டியவை……..
எனினும் ‘இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பவர் யார்? அவருடைய வாழ்க்கைப் பின்புலம் என்ன? எத்தகைய சூழலில் அவர் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார்? இவ்வியக்கத்தை உருவாக்க வழிநடாத்த அவர் கையாண்ட வழிமுறைகள் (தந்திரோபாயங்கள்) என்ன? ‘ என்பன போண்ற விடயங்களை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உலமாக்கள் ஆய்வாளர்கள் அபிமானிகள் உட்பட பலரும் அலட்டிக் கொள்வதுமில்லை; அறிந்துகொள்ள ஆர்வங்காட்டுவதுமில்லை; பக்கசார்பற்ற நடுநிலையான ஆய்வுக்குட்படுத்த முன்வருவதுமில்லை.???
அல்லாஹ்வின் உதவியால் ஒரு சிறு முயற்சி
மேற்படி இடைவெளியை நிரப்பும் முயற்சியின் ஒரு கட்டமாகவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகரின் வாழ்க்கைப் பின்புலத்தையும் அவர் எவ்வாறு இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர்
ஓர் விரைவுப் பார்வை
பிறப்பு:
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா என்பவர் எகிப்தின் ‘புஹைறா’ மாகாணத்தில் உள்ள ‘மஹ்மூதிய்யா’ எனும் கிராமத்தில் 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.
ஹஸன் அல் பன்னா :
ஹஸனுல் பன்னாவின் தந்தை:
இவரது தந்தை அஹ்மத் அப்துர் றஹ்மான் அல் பன்னா என்பவர் கடிகாரம் திருத்தும் தொழிலை செய்துவந்ததுடன் ஹதீஸ் கலையை கற்ற ஒரு அறிஞராகவும் திகழ்ந்தார்.
‘முஸ்னத் அஹ்மத்’ எனும் மாபெரும் ஹதீஸ் கிரந்த்திற்கு இவர் வழங்கிய ‘அல் பத்ஹுர் ரப்பானி’ எனும் ‘ஒழுங்கமைப்பு’ நூலும் ‘புலூகுல் அமானி’ எனும் விரிவுரை நூலும் இவரின் மகத்தான பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். (அல்லாஹ் அன்னாரின் பணிகளை அங்கீகரித்து என்றென்றும் அருள் புரிவானாக)
ஹஸனுல் பன்னா ஒரு தீவிர ஸூபியாக:
சொந்த ஊரான ‘மஹ்மூதியா’வில் காணப்பட்ட குர்ஆன் மத்ரஸாவில் இணைந்து அல்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அரச பாடசாலையில் இணைந்துகொண்ட ஹஸனுல் பன்னா அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.
இவர் தனது பாடசாலை நாட்களில் ஸஹ்பான் றஜப் ஆகிய இரு மாதங்கள் நோன்பு நோற்றதையும் தனது நன்பர்கள் சிலருடன் சேர்ந்து வகுப்பறையில் ‘கல்வத்’ (தனிமை) அனுஷ்டித்ததையும்!! அதன் போது ‘மௌனவிரதம்’ இருந்ததையும் இதனால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்பத்தையும் அவரே தனது சுய சரிதையில் எடுத்தெழுதியிருப்பது வழிகெட்ட ஸூபித்துவத்தினால் ஹஸன் அல் பன்னா அவர்கள் சிறுபிராயத்திலேயே எந்தளவிற்கு தாக்கமடைந்திருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(பார்க்க ‘முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா 19_ 31)
ஹஸனுல் பன்னா ஓர் ஆசிரியராக:
இவ்வாறே தனது ஆரம்பக்கல்வியை பித்அத்துகளிலும் மௌனவிரதம் போண்ற வேற்றுமத வழிபாட்டு முறையிலும் கழித்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது பதி்நான்காம் வயதில் ‘தமன்ஹூர்’ நகரில் உள்ள ‘முதல் நிலை ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்துகொண்டார்.
மேற்படி பாடசாலையில் சேர்வதற்கு ‘அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்’ என்ற தகமை கட்டாயமாக இருந்தபோதும் அல்குர்ஆனின்
ஒரு சில பகுதிகளையே (ஜுஸ்உ) மனனம் செய்திருந்த ஹஸன் அல் பன்னாவை அப்பாடசாலை அதிபர் ‘பஸீர் தஸூகி மூஸா’ அவர்கள் ஓர் வாய்மொழிப் பரீட்சை மூலமாகவும் மற்றொரு எழுத்துப் ப்ரீட்சை மூலமாகவும் பரிசோதித்து இரு வருட கற்கை நெறிக்காக அப்பாடசாலையில் சேர்த்துக் கொண்டார்.
ஹஸனுல் பன்னா ஓர் தீட்சை பெற்ற முரீதாக:
இக்காலப்பகுதியியே ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்வில் முக்கிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியலிலேயே வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ‘ஹஸ்ஸாபிய்யா தரீக்கா’வின் முக்கிய பிரமுகர்களான ‘ஷேக் ஷிப்லிஇ முஹம்மத் அபூ ஷவ்ஷாஇ ஷேக் ஸெய்யித் உஸ்மான்இ அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அதனூடாக தரீக்காவின் தலைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.
இவர்களோடு இணைந்து ‘தமன்ஹூர்’ நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கால்நடையாகச் சென்று ஔலியாக்களின் சமாதிகளை!!! தரிசிக்கும் செயல்களிலும் ஹஸனுல் பன்னா அவர்கள் ஈடுபட்டார்கள்.
மேற்படி சூழலில்தான் ஹஸனுல் பன்னா அவர்கள் தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் ‘பைஅத்’ ( ‘எச்சந்தர்ப்பத்திலும் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்’ என்ற உறுதி மொழி) பெற்றுக் கொண்டு தரீக்காவில் இணைந்து ‘அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்’ ஹஸ்ஸாபியா நலன்புரிச் சங்கம் எனும் சங்கத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அச்சங்கத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்கள்.
‘பைஅத்’ ஒரு சிறு விளக்கம்:
இவ்விடத்தில் இஸ்லாத்தின் பார்வையில் ‘பைஅத்’ என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இரு வகையான ‘பைஅத்’களையே அனுமதித்து ஆர்வமூட்டி வலியுறுத்துகின்றன.
1. அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாக அல்லாஹ்விடம் ‘பைஅத்’ செய்வது.
2.அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் இஸ்லாமிய ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக அவரிடம் ‘பைஅத்’ செய்வது.
மேற்படி முதலாவது வகையான அல்லாஹ்விடம் செய்யவேண்டிய ‘பைஅத்’தை ‘(நபியே) உம்மிடம் ‘பைஅத்’ செய்பவர்கள் அல்லாஹ்விடம் ‘பைஅத்’ செய்கிறார்கள்’ (48:10) எனும் அல்குர் ஆன் வசனத்திற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் செய்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்பு இவ்வகை ‘பைஅத்’தை வேறு யாரிடமும் செய்துகொள்ளக்கூடாது.
இரண்டாவது வகையான ‘பைஅத்’ தை சர்வ அதிகாரங்கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளருக்கு செய்யவேண்டுமே தவிர தரீக்காக்களின் ஷேக்மார்கள் இயக்கத்தலைவர்கள் ஆகியோருக்கு ஒரு போதும் செய்துகொடுக்கக்கூடாது என்பதை மாத்திரம் இவ்விடத்தில் சுருக்கமாக விளங்கிக்கொண்டு எமது கட்டுரையைத் தொடர்வோம்.
ஹஸனுல் பன்னா ஒரு தரீக்காப் பிரச்சாரகராக:
இவ்வாறே ஆரம்ப ஆசிரியர் பயிற்சியை இரு வருடங்களில் பூர்த்தி செய்த ஹஸனுல் பன்னா அவர்கள் பின்பு ‘தாருல் உலூம்’ கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை தனது இருபத்தியாறாவது வயதில் முழுமையாக முடித்து 1928ம் ஆண்டு வெளியேறினார்கள்.
குறித்த ஆண்டிலேயே எகிப்தின் பிரபலமான ‘இஸ்மாஈலிய்யா’ நகரத்தில் அறபு மொழி ஆசிரியராக நியமனம் பெற்று கடமையாற்ற ஆரம்பித்தார்.
மேற்குறிப்பிட்ட ‘இஸ்மாஈலிய்யா’ நகரத்திலேயே ஹஸனுல் பன்னாவின் முழுத்திறமையும் வெளிப்பட்டது. அறிவையும் அறிஞர்களையும் மதிக்கும் இஸ்மாஈலியா மக்கள் மத்தியில் அல்குர் ஆனின் சில பகுதிகளையும் ‘தீவானுல் முதனப்பிஹ்’ உட்பட சில அறபுக் கவித்தொகுப்புகளையும் மனனம் செய்திருந்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது உணர்வுபூர்வமான பேச்சினாலும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.
பள்ளிவாயில்களில் மாத்திரமின்றி மக்கள் மண்றங்கள்இ உணவகங்கள்இ பொது மைதானங்கள்இ தெருமுனைகள் போண்ற இடங்களில் ஹஸனுல் பன்னா அவர்களால் முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் சாரிசாரியாக ‘ஹஸ்ஸாபிய்யா’ தரீக்காவில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மக்கள் ஆதரவு பெருகப்பெருக வெறுமனே ‘ஒரு தரீக்காவின் நலன்புரிச்சங்கம்’ என்ற நிலையில் இருந்து சீர்திருத்தம்இ சமூக மாற்றம்இ தீமையை எதிர்த்தல்இ பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தல் போண்ற சமூக நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதன் காரணமாக இஸ்மாஈலிய்யா நகரத்தில் தனது தரீக்காவுக்கென தனியான பள்ளிவாயில் ஒன்றையும் பெண்களுக்கான பிரச்சார நிலையம் (சென்டர்) ஒன்றையும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் அமைத்துக்கொண்டார்.
இவ்வாறே அரசியல் ஆட்சி என்பனவற்றுடன் அனுவளவும் சம்பந்தப்படாமல் முழுக்க முழுக்க ஒரு ஸூபித்துவ அமைப்பாகவே செயற்பட்டு நாடளாவிய ரீதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் பின்புதான்இ ‘ஹஸ்ஸாபிய்யா தரீக்கா’வுக்குள் தனது கை மேலோங்கியதன் பின்புதான் ஹஸனுல் பன்னா தனது துரோகச் செயலை செயற்படுத்த ஆரம்பித்தார்.
ஹஸனுல் பன்னா குருவை மிஞ்சிய சீடனாக:
ஆம் ‘ எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்’ என தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு செய்திருந்த ‘பைஅத்’ (உறுதி மொழி) யை உடைத்துக்கொண்டு தரீக்காவின் பெருமளவிலான தொண்டர்களை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் தனி இயக்கத்தை 1928ம் ஆண்டில உருவாக்கினார்.!!!
மேற்படி பச்சைத்துரோகத்தை ஹஸனுல் பன்னா அவர்களே தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்படும் வரை ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் உருவாக்கப்பட்ட போது அவருக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. அது அவரது அபிப்பிராயம்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.!!!?’
பிளவுபட்ட இஹ்வான்கள்:
இவ்வாறு துரோகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் கொல்லப்படும் வரை ஓரணியாக வழிநடாத்திச்செல்ல முடிந்ததா? அல்லது ‘ ஒரு கெட்ட செயலுக்கான கூலி அதைப் போண்றதொரு கெட்ட செயலே’ (42:40) எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்பவும் ‘விணை விதைத்தவன் விணை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்’ எனும் முதுமொழிக்கேற்பவும் உள்ளிருந்து ஏற்பட்ட துரோகத்தால் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உள்ளிருந்து ஏற்பட்ட துரோகங்களினாலேயே பல கூறுகளாக பிளவுப்ட்டுப் போனதா? என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் தொடந்தும் நோக்குவோம்.
எமது பிரார்த்தனை
‘எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆய்வுகள், வழிதவறிய இயக்கங்கள்
« ஷீஆக்களின் புரட்சியை அங்கீகரித்த மெளலான மெளதூதி! வழிதவறிய இயக்கங்கள் »
2 Responses to “துரோகத்தில் தோண்றிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம்!”
- darulathar, மேல் ஜூலை 14th, 2008 இல் 9:41 நான் சொன்னார்:
சகோதரர்கள் கவனத்திற்கு:
சத்தியத்தை தெளிவுபடுத்த வேண்டுமென்ற தூய்மையான நோக்கமே அன்றி வேறு எந்த எண்ணத்தோடும் இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாற்றுக்கருத்துடைய சகோதரர்கள் தாராளமாக தங்கள் கருத்துக்கலை எமக்கு எழுதலாம். எம்மிடம் தவறிருந்தால் திருத்திக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்!
- masdooka, மேல் ஜூலை 15th, 2008 இல் 9:40 நான் சொன்னார்:
மார்க்கம் சரியாகத் தெரியாமல் பைஅத் என்னும் மாயையில் மூழ்கி எண்ணற்ற இளைஞர்கள் திசைமாறி சென்று கொண்டுள்ளனர். எனவே பைஅத் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாட்டை இன்னும் விரிவான ஒரு கட்டுரையாக தாங்கள் வெளியிட்டால் வழி தவறிச் சென்று கொண்டிருக்கும் இளைஞர்கள் நேர்வழியின் பக்கம் திரும்பிவருவர். இன்ஷா அல்லாஹ்.
Share your views...
0 Respones to "துரோகத்தில் தோன்றிய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம்."
Post a Comment