இஸ்லாமியச் சிந்தனை




வன்னியின் மகிந்தன் தவ்ஹீத் அழைப்பாளன்.k.m.jawahir jamali.
இபாதத்துக்களும் அதனூடாக சமூக இலட்சியங்களும்
1) கூட்டுத் தொழுகை
2) ஸகாத்
3) நோன்பு
4) ஹஜ்
5) பள்ளிவாசல் - சமூகத்தின் நாடித் துடிப்பு
6) மஸ்ஜித்களின் பணி

மனித சமூகத்திற்காக இஸ்லாம் வலியுறுத்தியுள்ள இபாதத்களும் கட்டாயப்படுத்தியுள்ள கடமைகளும் சமூக ஒழுங்குகளையும் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அவற்றின் விளைவுகளும் முடிவுகளும் சமூகம் சென்றடைய வேண்டிய நோக்கங்களைப் பூர்;த்தி செய்கின்றன. எச்சமூகம் இக்கடமைகளை முறையாகக் கடைபிடித்து நிறைவேற்றி வருகின்றதோ, அச்சமூகம் சிறந்த விளைவுகளையும் முடிவுகளையும் பெறும் என்பது இஸ்லாம் கூறவரும் கருத்தாகும்.
உண்மையில், இவ்வாறான இபாதத்துக்களின் விளைவுகளைப் பற்றிய ஆய்வு முயற்சிகள் எதுவுமின்றி, படைத்தவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்ட வழிபடுவதே உண்மை விசுவாசியின் உயர் பண்பாகும்.

எனினும் இஸ்லாமிய அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறும் கருத்து என்னவெனில், அல்லாஹ் சகல ஞானங்களும் பொதிந்தவன். அனைத்தையும் அறிந்தவன். பல அடிப்படைகள், திட்டங்களை இலட்சியமாக் கொண்டே இபாதத்துக்களையம் ஷரீஅத் சட்டதிட்டங்களையும் அவன் இட்டுள்ளான். மனிதன் சமூகத்துடனான தொடர்பின்றி வாழ முடியாதவன். அத்துடன், ஆன்மீக, லௌகீக வளர்ச்சி அவனுக்கு மிக அவசியமான தேவையான இருந்து வருவதன் காரணமாகவும், அவனது வாழ்க்கை, குடும்பம் ஒழுக்கம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு துறை சார்ந்து அமைய வேண்டியிருப்பதன் காரணமாகவும் அல்லாஹ் இவ்வாறான பல்வேறு அடிப்படைத் திட்டங்களையும் வழிமுறைகளையும் மனித சமூகத்துக்கு வழங்கியிருக்கலாம் என அவர்கள் அபிப்பராயப்படுகின்றனர்.

இந்த நிலையில் தனி மனித பண்பாடுகளுடன் சமூக இலட்சியங்களும் ஒழுங்குகளும் இபாதத்தின் இலட்சியங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகளுடன் மனித வாழ்க்கைக்கான இஸ்லாத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களும் நடைமுறைகளும் சமூக அடிப்படைகளையும் போதனைகளையுமே கற்றுத் தர முனைவதாக இவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையாகிய தொழுகை, அன்பு, கருணை, பரஸ்பர உதவி, அறிமுகம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற பல்வேறு சமூகவியல் பண்புகளை மனித உள்ளங்களில் தூவி விடுவதில் முக்கிய பங்காற்றுகின்றது. வேற்றுமைகள், பிரிவினைகளை வேரறுத்து அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்து உருவான சந்ததிகள், ஒரே தந்தை, தாயிலிருந்து பிறந்த சகோதரர்கள் என்ற பாடங்களை தொழுகை போதிக்கின்றது.
கூட்டுத் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஜமாஅத்தாக அமுல்படுத்துமாறு கட்டளையிட்டு, அதன் சிறப்புக்களைப் பல்வேறு ஹதீஸ்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளமைக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் தொழுகை, தனித்துத் தொழும் தொழுகையை விட இருபத்தேழு மடங்கு சிறப்புடையது.
(ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)
மூவர் ஒரு கிராமத்திலோ, நாட்டுப் புறத்திலோ இருக்கும் வேளை அவர்களுக்கு மத்தியில் தொழுகை (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்படாவிடின், அவர்களை ஷைத்தான் ஆக்கிரமித்துக் கொள்கின்றான். எனவே, ஜமாஅத்தைக் கடைபிடித்துக் கொள். நிச்சயமாக தனித்து ஒதுங்கும் ஆட்டைத் தான் ஓநாய் வேட்டையாடுகிறது. (ஆதாரம் : அபூ தாவூத், நஸாயீ, அஹ்மத், ஹாகிம்)

முஸ்லிம்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து இவ்வாறான மார்க்க அடிப்படையை நாளொன்றுக்குப் பல தடவைகள் நிறைவேற்றும் போது அது அவர்களுக்கிடையிலுள்ள கூட்டுறவையும், பலத்தையும் பிரதிபலிப்பதாகவே அமையும். ஜமாத் தொழுகை மூலம் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளும் இவ்வாறான சிறப்பம்சங்களை வேற்று மதத்தவர்களும் கூட அண்மைக்காலமாக அறிந்து வருகின்றனர். அதனால் அவர்கள் கவரப்படுவதிலும் ஆச்சரியமில்லை. பிரான்ஸ் நாட்டுத் தத்துவ ஞானி ரெனான் அவர்களின் கூற்று இதனைப் பிரதிபலிக்கின்றது.

நான் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜித் ஒன்றில் நுழைந்த போது உள்ளச்சத்தால் திடுக்குற்றேன். அவ்வேளை, நான் ஒரு முஸ்லிமாக இல்லாததையிட்டுச் கைசேதமடைந்தேன் எனக் குறிப்பிடுகின்றார்.
நாளாந்தம் நிறைவேற்றப்படும் ஜமாஅத் கூட்டுத் தொழுகைகளுக்கு இருக்கும் பாரிய இப்பங்கு அல்லது தாக்கத்தின் காரணமாகவே, இதனை விட விசாலமான அமைப்பில், முஸ்லிமக்ள அனைவரும் கிழமையில் ஒரு தடவை கட்டயாத்தின் பேரில் மஸ்ஜிதில் அணி திரளும் ஜும்ஆ தொழுகையை இஸ்லாம் கட்டளையாக விதித்திருக்கிறது.

ஜமாஅத் எனும் கூட்டு முயற்சி இன்றி ஜும்ஆ எனும் ஒன்று கூடல் இல்லை என்ற நிர்பந்தமும் கட்டயாமும் தோன்றுமளவுக்கு அதன் கடமை இருந்து வருகிறது.
முஃமின்களே! ஜும்ஆ தினத்தில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்படடால், வியாபாரங்களை விட்டு விட்டு அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்காக விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். (அல் ஜும்ஆ : 08)

உண்மையில், தினந்தோறும் தொழுகையில் சந்தித்துக் கொள்ளும் தனது சகோதரனை, சில வேளை, சில காரணங்களால் சந்திக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடலாம். அந்த வகையில் வாரத்தில் ஒரு முறையாவது இழந்த சகோதரத்துவத்தை, சகவாசத்தை மீட்டிக் கொள்வதற்கும் புதுப்பித்துக் கொள்வதற்கும் வாராந்தக் கூட்டுத் தொழுகை வழியமைத்துக் கொடுப்பதுடன் மார்க்க உலக விவகாரங்கள் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஜும்ஆப் பிரசங்கம் வழிவகுக்கிறது. தமது பிரதேசங்களிலுள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தம்மைப் பீடித்திருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், எதிரிகளின் சதித்திட்டங்கள், அந்நியர்களின் ஊடுறுவல்கள் அனைத்தையும் இனங்கண்டு அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கூட்டாகவே நிறைவேற்றிக் கொள்ளவும் இக் கூட்டுத் தொழுகை களம் அமைக்கிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் சமூகவியல் வட்டத்தை இன்னும் விசாலமாக்கி, பெரிது படுத்தும் நோக்கிலேயே இருபெருநாள் தொழுகைகளையும் கூட்டாக நிறைவேற்றுமாறு பணித்திருக்கிறார்கள். சில இமாம்கள் இத் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றப்படுவதை வாஜிபாகக் கருதுமளவுக்கு அதிலே சமூக ஒழுங்குகளும் தாத்பரியங்களும் பொதிந்துள்ளன.

இஸ்லாமிய தத்துவ ஞானி கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள் ஜமாஅத் தொழுகையின் உண்மை வடிவத்தைப் பின்வருமாறு விளக்குகிறார். தொழுகையின் உண்மை இலட்சியம் அது கூட்டாக மேற்கொள்ளப்படும் போதே நிறைவேறுகிறது. ஜமாஅத் அல்லது கூட்டுமுயற்சியில் வழிபடும் மனிதர்களை ஒரே இலட்சியமே ஒன்றிணைக்கிறது. அவர்களனைவரின் நோக்கமும் ஒன்றே. ஒரே உணர்வே அவர்களது உள்ளங்களில் பிரதிபலிக்கிறது. சாதாரண மனிதனிடத்தில் கூட புரிந்துணர்வுப் பலத்தை வளர்த்து, அவனின் உணர்வுகளை ஆழப்படுத்தி, தனிமையை, ஒருமையை அவனின் சிந்தனையிலிருந்து அகற்றி சமூக மயம் எனும் மனப்பக்குவத்தை அவனிலே ஊட்டி விடுகிறது எனக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

இந்த வகையில் மனிதர்களிடத்தில் வேற்றுமைகளை இல்லாதொழித்து, அவர்களின் வாழ்வுக்கு அவசியமான ஒற்றுமையை நிலைநாட்டுவதில் செயல் ரீதியானதும், சிந்தனை ரீதியானதுமான பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டுத் தொழுகைக்கு மிகப் பெரிய பங்குண்டு.
ஸகாத்
பொதுவாகச் சமூகத்தின் பின்னடைவுக்கும் அதன் வீழ்ச்சிக்கும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக அமைகின்றன. இச்சமூக விரோதச் செயல்களுக்குப் பின்னணியாக, பொருளாதாரப் பிரச்னைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. எச்சமூகத்தில் வறுமை, அநீதியான பங்கீடு, பதுக்கல், மிதமிஞ்சிய சேமிப்பு போன்ற பொருளதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றனவோ, அச்சமூகத்தில் அநீதி, வர்க்கப் போராட்டம், களவு, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களும் குற்றங்களும் மலிந்து காணப்படும்.

இஸ்லாம் கடமையாக்கியிருக்கும் ஸகாத், மேற்குறித்த அனைத்து பொருளாதாரச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அவர்களுக்கிடையில் சிறந்த கட்டுக் கோப்பை வளர்த்து விடுகிறது.
ஸகாத் எனும் பதம் 'தூய்மைப்படுத்துதல்' எனும் கருத்தைப் பொதிந்துள்ளது. அதனை வழங்குபவன் எவ்வாறு பாங்களில் இருந்தும் தவறுகளிலிருந்தும் தூய்மையடைகின்றானோ அவ்வாறே, அவனின் செல்வமும், வழங்கப்படும் சமூகமும் பல்வேறு பிரச்னைகளிலிருந்தும் தூய்மையடைகிறது. ஏழை மனதிலுள்ள கவலைகள் நீங்குகின்றன. பகைமை குடியிருந்த இடத்தில் நட்பு மலர்கின்றது. வெறுப்பு நீக்கப்பட்டு அன்பு பரப்பப்படுகின்றது.

ஒரே குடும்பமாகப் பரஸ்பர ஒத்துழைப்புகளிலும் உதவிகளிலும் எக்காரணம் கொண்டும் அவர்கள் பின் நிற்க மாட்டார்கள்.
ஸகாத் ஒன்று சேர்க்கப்படும் முறையிலும் பங்கிடப்படும் ஒழுங்குகளிலும் ஏழைகள் இழிவுபடுத்தப்படவோ, ஸகாத்தை வழங்கிய செல்வந்தன் உயர்த்தப்படவோ வழிகள் இல்லை. செல்வந்தன் தனது ஸகாத் ஊடாக எழை மீதான ஆதிக்கத்தை மேற்கொள்ள முடியாது. தனது சகோதரனின் மீது கொண்ட அன்பு, கருணை காரணமாக அல்லாஹ், தன் மீது விதித்திருக்கும் கடமையை நிறைவேற்றுவதாகவே அவன் கருத வேண்டும்.

தனது எண்ணத்தை தூய்மைப்படுத்துவதன் ஊடாக ஓர் ஆன்மீகப் பக்குவத்தை அவன் பெற வேண்டும். அவன் வழங்கும் ஸகாத், பெருமை, அகங்காரம், கர்வம், அட்டகாசம் போன்ற இழிபண்புகளிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறான பரிபக்கு நிலையைப் பெறுவதனூடாகவே அவனால் நிறைவேற்றப்பட்ட ஸகாத் கடமையும் பூரண நிலையை அடைகின்றது. இன்றேல் அவனது செயல் அர்த்தமற்றதாகி விடும்.
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன். (2:263).

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. அவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)
நோன்பு
சமூக அங்கத்தவர்களுக்கிடையில் தொடர்புகளை, உறவுகளை பலப்படுத்துவதில் நோன்பு முக்கிய சாதனமாகக் கடைமையாற்றுகின்றது. உடல், உளரீதியான சம உணர்வுகள, ஏக காலத்தில் அடியார்களுக்கு மத்தியில் வித்தியாசமின்றி தோற்றுவிப்பதில் நோன்புக்கிருக்கும் ஆற்றலும் சக்தியும் வேறு எச்சாதனத்துக்கும் இல்லை.
பிரதேசம், காலம், இனம், வகுப்பு, தரம், பால் பேதங்களின்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக சமூகத்தின் சர்வதேச சமத்தும், சகோதரத்துவம், ஈகை, கருணை, அன்பு, உதவி அதை;ததையும் பேணிக் கொள்ள விரும்பும் ஒருவன் நோன்புக் காலத்தில் அவற்றை இலகுவாகக் கண்டு கொள்வான். பதினொரு மாத காலமாக, பல்வேறு வேலைகளால் மற்நதிருந்த சகோதர வாஞ்சையை உதவும் மனப்பக்குவத்தை, எதனையும் எதிர்கொள்ளும் தியாக சிந்தையை, ஒற்றுமை உணர்வை மீட்டிக் கொள்வதற்கான பரிகாரத்தை இக்காலத்தில் மேற்கொள்கிறான்.

சமூத்திலுள்ள அனைவரும் இவ்வாறான ஒரே உணர்வுகளையும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பெறும் போது அங்கே சமூக மலர்ச்சியுடன் மனித நேயங்கள், பண்பாடுகள் புத்துயிர் பெறுகின்றன.
யார் வீணான வார்த்தை பேசுவதையும் அதனடிப்படையில் செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ, அவர் உண்ணுவதையும், குடிப்பதையும் விட்டு விட்டதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையும் இல்லை. (ஆதாரம் : புகாரீ, அபூதாவூத், திர்மிதீ)

நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றுவிட்டால், அந்நாளில் அவர் தகாத முறையில் நடந்து கொள்ளவோ, வீணான முறையில் சத்தமிட்டுத் திரியவோ வேண்டாம். அவனை யாராவது ஏசினால் அல்லது அவனோடு சண்டையிட்டுக் கொண்டால், 'நான் ஒரு நோன்பாளி' என்று கூறட்டும். (ஆதாரம் : முஸ்லிம்)

முஸ்லிம்களை ஆன்மீக ரீதியாக ஒன்றிணைத்து அவர்களிலே பலத்தையும் சக்தியையும் உந்துதலையும் ஏற்படுத்தும் ஆற்றலம் நோன்புக்கு இருப்பதன் காரணமாகவே, முஸ்லிம்களால் அன்றைய பத்ர் போராட்டத்தில் சத்திய வெற்றியை நிலைநாட்ட முடிந்தது. இழந்த மக்காவை மீண்டும் மீட்டிக் கொள்ள முடிந்தது. இன்னும் பல சாதனைகளை வரலாற்றிலே சாதிக்க முடிந்தது. நோன்பின் இவ்வாறான சமூகவியல் தாக்கங்கள் உரிய முறையில் பேணப்படின் இவை போன்ற அரிய பல சாதனைகளைப் பிற்காலங்களாலும் நிகழ்த்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஹஜ்
தொழுகையினூடாகப் பிரதேசவாரியான ஒற்றுமையையம் ஐக்கியத்தையும் பெற்றுக் கொண்ட முஸ்லிம்கள் ஹஜ் கடடையினூடாக அதன் வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற, பல இலட்சக் கணக்கான புதுமுகங்களைத் தரிசித்து, உலகளாவிய சகோதரத்துவத்தையும் பரஸ்பர சமத்துவத்தையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அவர்களிலே இக்கடமை ஏற்படுத்தி விடுகிறது. பல நாடுகள் ஒன்றிணைந்து பல பில்லியன் ரூபாய்கள் செலவிட்டும் ஒன்று கூட்ட முடியாத சர்வதேச ஐக்கிய மாநாடொன்று ஹஜ் காலத்தில் சுயமாக ஒன்று சேர்கிறது.

ஹஜ் செய்ய வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் மிகத் தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள். (அல் ஹஜ் : 127)
அல்லாஹ்வின் வீட்டில் ஒன்றிணைகிறோம் என்ற தமது ஒரே எண்ணத்தை ஏகோபித்த குரலில் இவர்கள் காட்டி விடுகிறார்கள். பல்வேறு நாடுகள், கலாசாரங்கள், நடைமுறைகள், முன்னேற்றங்கள் அனைத்தையும் மறந்து தமது எண்ணத்திலும், செயற்பாட்டிலும் சமத்துவத்தைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த மிகப் பெரிய உண்மையை இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்லும் மேற்கத்தியவாதி ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் உடைந்து போகாத பலமான பெரும் பாறாங்கல்லைப் போன்றது. இறைவேதமான அல்குர்ஆன், அல் அஸ்ஹர் சர்வகலாசாலை, வாராந்திர ஜும்ஆ ஒன்று கூடல், வருடாந்தர ஹஜ் மாநாடு போன்ற நான்கு விசேட அம்சங்களும் இருக்கும் வரை கிறிஸ்தவப் பிரச்சாரம் எனும் கப்பல்கள் அதிலே முட்டி மோதி, நொறுங்கி விடுவதைத் தவிர்க்க முடியாது.

முஸ்லிம்கள் நாகரீக, கலாச்சாரச் சின்னமாகவும் அவர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும், மஸ்ஜிதுகள் திகழந்து வருகின்றன. அவர்களின் கட்டுக்கோப்பு, கூட்டுறவைப் பலப்படுத்தி அவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் மஸ்ஜிதுகளுக்கு மிகப் பெரிய பங்குண்டு. தொழுகை, ஜமாஅத், ஜும்ஆ என்பதோடு மாத்திரம் அதன் பணிகளைக் சுருக்கிக் கொள்ளாது, சமூக ஒற்றுமைக்கு அடித்தளமிடக் கூடிய பல காரணிகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் அவற்றைச் சமூக இலட்சியங்களாக முதன்மைப்படுத்தியிருப்பது சமூகப் புனரைப்பு, நிர்மாணத்தில் மஸ்ஜித் வகிக்கும் பங்கை விளக்கப் போதுமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா காலப்பிரிவில் இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காகப் பல கஷ்டங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தார்கள். புதிய சமுதாயத்தின் தோற்றத்துக்குப் பல்வேறு வகையான இடையூறுகள், தடைகள் இருப்பதோடு அதற்குரிய பொருத்தமான சூழலைக் கண்டு கொள்ளாத நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அதற்குரிய சாதக சூழ்நிகைள் நிலவுவதை கவனித்தார்கள்.

இந்த வகையில் மிகப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்ட மதீனா நோக்கி தமது ஹிஜ்ரத் முயற்சியை மேற்கொண்டார்கள். மதீனா சென்றடைந்த நபி (ஸல்) அவர்கள் சமூக உருவாக்கத்துக்காக, அவர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்கள், அடிப்படைகளை முன்வைத்தார்கள். மதீனாவில் ஒரு மஸ்ஜிதை நிர்மாணிப்பதிலும் ஈடுபட்டார்கள். உண்மையில் நபித்தோழர்களான முஹாஜிர்கள், அன்சாரீன்கள் மத்தியில் வரலாறு காணாத சகோதரத்துவமும் ஐக்கியமும் நிலவியமைக்கு நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற ஆளுமை காரணமானதுடன் அவர்கள் மஸ்ஜித் நிர்மாணத்துக்கும் தனியான பங்குண்டு என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.

மஸ்ஜிதின் சேவைகளாக தொழுகைகளை மாத்திரம் அவர்கள் கருதவில்லை. சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராயும் சமூக நிலையமாக, மனிதப் பிணக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லும் நீதிமன்றமாக, ஆன்மீக, லௌஹீகப் பயிற்சிகளை வழங்குவதில் பாசறையாக, அறிவைப் பெருக்கும் பாடசாலையாக, நிர்வாகத் திட்டமிடலகள், ஒழுங்குகள் பற்றிக் கலந்துரையாடும் பாராளுமன்றமாக, பிரதிநிதிகள், தூதுக்குழுக்களைச் சந்தித்துக் கொள்ளும் வரவேற்பகமாக, போராட்டங்களுக்கு தயார்படுத்தும் இராணுவப் பாசறையாக.. ஆக.. சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் அம்சங்களையும் பிரதிபலிக்கும் சின்னம் என்றே மஸ்ஜிதை அவர்கள் கருதினார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் வரலாறுகள் இப்பாடங்களையே இன்று வரை எமக்குப் புகட்டுகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றில் மஸ்ஜிதுகளுக்குத் தனியான இடம் உண்டு. இந்த வகையில் பல்வேறு வகையான பாதிப்புகளை வரலாற்றில் ஏற்படுத்தி உலக முஸ்லிம்களின் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை மஸ்ஜிதுக்கு உண்டு.

தேசம் எனும் எல்லைக்கப்பால் சென்று, ''சர்வதேசம்"" எனும் உயர் அந்தஸ்தில் செயற்படும் இறையில்லம் மஸ்ஜித் ஆகும்;. ஒரு முஸ்லிம் புவியின் எப்பாகத்துக்குச் சென்றாலும் அவனை எவ்வித வேறுபாடுமின்றி அரவணைக்கக் காத்திருக்கும் புனித மாளிகையாக மஸ்ஜித் செயற்படுகிறது. இதனால் தான் பூகோளத்தின் எப்பாகத்தில் ஒரு முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்தாலும் அவர்களின் மத்திய நிலையமான மஸ்ஜிதை உருவாக்கிக் கொள்வது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகவும், கடமையாகவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உண்மையில் மஸ்ஜித் குறிப்பிட்ட ஒரு பிரதேச முஸ்லிம்களின் உருவாக்கமாக இருப்பினும், உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அதில் நுழைவதற்கு அதனைப் பயன்படுத்துவதற்கும் உரிமை பெற்றவனாகிறான் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பு உலகாயத, சடத்துவப் பெறுமானமின்றி அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்புக்குரிய இடம், புனிதமிகு இறையில்லம் எனும் ஆன்மீகப் பெறுமானத்தை மஸ்ஜித் பெற்றிருப்பதன் காரணமாக அதன் புகழும் மகிமையும் மேலோங்கி இருக்கிறது.

''தனிமனித சீராக்கமே சமூகச் சீர்திருத்தத்தின் ஆரம்ப்படி"" எனும் நடைமுறை உண்மையை மஸ்ஜித் நிரூபித்து, அதற்கான செயல் வடிவத்தைக் கொடுக்கின்றது. மஸ்ஜிதில் நுழையும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக உணர்வை வழங்கி அவனைப் புனிதனாக்குவதனூடாகச் சமூக உருவாக்கத்தை அது ஏற்படுத்துகிறது.

தூய்மை, உள அமைதி, இறையுணர்வு போன்ற அடிப்படைப் பண்புகளையும் உளப் பயிற்சிகளையும் முஸ்லிமின் உள்ளத்தில் ஊட்டி விடுகிறது. கடமைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூக உணர்வு, சமத்துவம், சமூக நலன் போன்றவற்றைக் கொண்ட சூழலின் அவசியம் இயல்பாகவே உணரப்படுகின்றது. சமூகப் பிரதிநிதியான ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு ஒரே சிந்தனையை, மனப்பக்குவத்தைப் பெறுவதன் மூலம் சமூகச் சீர்திருத்தம் உருவாக வழியேற்படுகின்றது.

உண்மையில் மஸ்ஜித் உலக முஸ்லிம்கள் அனைவரையும் நாளாந்தம், ஐவேளை ஒன்று கூட்டுகின்றது. உலக இன்பங்கள், இலாபங்களை அடைந்து கொள்தவற்கான ஒன்று கூடலாக அன்றி, அன்பு, கருணை, உதவி இறைவழிபாடு, சந்திப்பு போன்ற பல்வேறு நோக்கங்களும் இலட்சியங்களும் அவர்களை ஒன்றிணைக்கின்றன. குரோதம், வஞ்சனை, பகைமைகள் முறியடிக்கப்பட்டு, அங்கே சகோதரத்துவ, சமத்துவ உணர்வை இவ்வொன்று கூடல் மலரச் செய்கின்றது. இதன் காரணமாகத் தான்; நபி (ஸல்) அவர்கள் வீட்டிலோ, சந்தையிலோ தனித்துத் தொழுவதை வரவேற்காது, தனித்துத் தொழுவதை வரவேற்காது, பள்ளியில் கூட்டாகத் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் தொழுகை, தனியாக மேற்கொள்ளப்படும் தொழுகையை விட இருபத்தைந்து அல்லது இருபத்தேழு மடங்கு சிறப்புடையது. உங்களில் ஒருவர் வுழுவை சிறப்பான முறையில் செய்து தொழுகையை அன்றி வேறெதனையும் நோக்கமாகக் கொள்ளாது பள்ளியை நோக்கி வருகிறார். அவர் மஸ்ஜிதில் நுழையும் வரை அவரின் ஒவ்வொரு காலடிக்கும் ஒவ்வொர் அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது. அவர் பள்ளியில் நுழைந்து விட்டால் தொழுகை அன்றி வேறெதுவும் அவைரத் தடுக்கவில்லை. அவர் தொழுகைக்காகத் தனது இருப்பில் வுழுவோடு இருக்கும் காலமெல்லாம் மலக்குகள் அவர் மீது ஸலவாத்து கூறுகின்றனர்.

எமது இரட்சகனே! இவரின் பாவங்களை மன்னித்து விடு. இவருக்குக் கருணை காட்டுவாயாக! எனப் பிரார்த்தனையும் புரிகின்றனர். (ஆதாரம் : புகாரீ)
இறையச்சத்துடன் கூடிய பூரண கட்டுப்பாட்டை மஸ்ஜித் அடியார்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றது. நிர்ப்பந்தமாகவன்றி சுயவிருப்பின் பேரிலான கட்டுப்பாடாக இது அமைகின்றது. இமாமின் கட்டளைகளுக்கு, தலைவனின் ஏவல்களுக்கு சிரம் சாய்த்துக் கட்டுப்பட வேண்டும் எனும் ஒழுங்கு இங்கு போதிக்கப்படுகின்றது. அத்துடன் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது, அதற்குப் பழக்கப்படுவது என்பவற்றின் பால் சமூகம் கொண்டுள்ள தேவையையும் கூட்டுத் தொழுகை உணர்;த்தி நிற்கின்றது.

தொழுகையின் போது அணி சீர்செய்யப்பட வேண்டும். காலுடன் காலும், தோளுடன் தோளும் சேருமளவு அணி நேர்த்தியாக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வற்புறுத்துகின்றது. உங்கள் அணியைச் சீராக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அணிச் சீராக்கம் தொழுகையின் பூரணத்துவத்தைச் சார்ந்தது. நீங்கள் பிரிந்து விட வேண்டாம். அதனால் உங்கள் உள்ளங்கள் பிரிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் முதலாவது அணியினர் மீது ஸலவாத் கூறுகிறார்கள். என்ற நபி (ஸல்) அவர்ளகின் கூற்றும் தொழுகைகளின் போது அணியைச் சீர் செய்வதில் அன்னார் காட்டிய அதிக அக்கறையையும் இதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

இவ்வாறான உயரிய நோக்கங்கள், பணிகளை மஸ்ஜித் பெற்றிருப்பதன் காரணமாகத்தான் கண்பார்வையை இழந்த உம்மி மக்தூம்; (ரலி) அவர்களையும் மஸ்ஜித்துக்கு வந்து தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். தனது கண் பார்வை இன்மையைக் காரணங் காட்டி மஸ்ஜித் வராதிருக்க சலுகையொன்றை நபி (ஸல்) அவர்களிடம் வேண்டிக் கொண்டதற்கு, உமக்கு 'அதான்" ஒலியைக் கேட்க முடியுகின்றதா? என வினவ, ஆம் எனப் பதில் கூறவே, அவ்வாறாயின், உமக்கென எவ்விதச் சலுகையையும் நான் பெறவில்லை எனக் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள். ஒன்று கூடலின் அவசியத் தேவையை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.

உலக முஸ்லிம்களின் தொழுகை நேரங்கள் பிரதேசத்துக்குப் பிரதேசம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படினும் ஒரேவேளையில் சகல முஸ்லிம்களும் தொழுகை மூலம் ஏதாவதொரு வகையில் ஒன்றிணைகிறார்கள் என்பது புவியியல் கூறும் உண்மையாகும். ஒரு முஸ்லிம் தொழுகையில் அல்லது இறைவணக்கத்தில் ஈடுபடும் போது தன்னுடன் உலகிலுள்ள பல கோடி முஸ்லிம்களும் ஏக இறைவனை வழிபடுவதில் ஒன்றுபடுகிறார்கள் என்ற சிந்தனை உணர்வு அவனின் உள்ளத்தில் பிறக்கின்றது. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் இவ்வாறான உணர்வு தோன்றுவதற்கு மஸ்ஜித் ஊடகமாக அமைகின்றது.
மஸ்ஜித்களின் பணி
மஸ்ஜிதின் தொழுகை தொழுகை தொடர்பான பணி எனும் வட்டத்திலிருந்து சற்று வெளிச் செல்லும் போது, நபி (ஸல்) அவாகளின் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் இதனால் பெற்று வரும் சேவைகளும் அனுபவித்து வரும் நன்மைகளும் அளப்பரியனவாக இருப்பதனைக் காணலாம். இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்கள் இதன் தத்ரூபத்தைப் பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டுகின்றன.

இஸ்லாம் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து கால சூழலுக்கேற்ப இயைந்து செல்லும் மார்க்கம். மனித சமுதாயத்துக்குப் பிரயோசனமளிக்கும் அனைத்து அறிவியல் வளர்ச்சிகளையும் தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அது விரும்புகிறது. அறிவின் ஊற்றான, கல்வியின் பிறப்பிடமாக இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் திகழ்ந்துள்ளமை இதனை நிரூபிக்கப் போதுமான சான்றாகும்.

நபித் தோழர்களான ஸஹாபாக்கள் அறிவொளி தேடுவதிலும் அதனைப் பரவலாக ஏனையோர்களுக்கு எடுத்துரைப்பதிலும் ஈடுபட்டார்கள். புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களுகு;கு இஸ்லாமிய ஞானங்களைப் புகட்டுவதிலும் கல்விப் போதனைகளை நடாத்துவதிலும் கூடிய கரிசனை காட்டினார்கள். இந்த வகையில் மஸ்ஜிதை அவர்கள் அறிவகங்களாக, பாடசாiலைகளாகக் கருதினார்கள். இவ்வாறு சர்வதேசக் கலையகமாக மஸ்ஜித் விளங்கியதன் காரணமாகத் தான், உலகின் எப்பாகத்திலிருந்தாவ கல்வி வேட்கையோடு வரும் மாணவனை அது வரவேற்காது விட்டு விடுவதில்லை.

இஸ்லாமியக் கலைகளான தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், வரலாறு என்பவற்றுடன் உலகக் கலைகளான தத்துவம், மருத்துவம், கணிதம், புவியியல், இரசாயனவியல், வானவியல் போன்ற ஏனைய பல கலைகளும் மஸ்ஜிதில் போதிக்கப்பட்டுள்ளன. மஸ்ஜித்களோடு இணைந்த பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்கள், நூல் நிலையங்கள், ஆய்வு நிலையங்கள் முதலிய அமைப்புக்கள் மஸ்ஜிதின் கல்விச் சேவைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இஸ்லாமிய நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இவ்வாறான கலையகங்கள் பாக்தாத், டமாஸ்கஸ், ஸ்பெய்ன், எகிப்து, ஷாம், கோர்டோவா போன்ற பிரதேசங்களில் காண முடிந்ததெனினும் நவீன காலங்களிலும் கூட அதன் தாக்கங்களும் பிரதிபலிப்புக்களும் இஸ்லாமிய உலகின் நாலா பாகங்களிலும் தொடர்கின்றமை தெளிவு.

இஸ்லாமியச் சட்டத்துறை இமாம்களான இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அஹ்மத் போன்றோருடன் தார்த்தாரியப் படையெடுப்பை முறியடிப்பதில் முக்கிய பங்கேற்ற இமாம் இப்னு தைமியா, இரசாயனவியலின் முன்னோடி ஜாபிர் இப்னு ஹய்யான், இரத்தச் சுழற்சி பற்றி கண்டுபிடிப்பாளர் இப்னுன் நபீஸ், மற்றும் புவியியல் வல்லுனர்களான யாகூத், அல்பிரூனி, இப்னு பதூதா, இப்னு ஜுபைர் போன்றோரும் நன்னம்பிக்கை முனையைச் சென்றடைய வாஸ்கோடாகாமாவுக்கு வழியமைத்துக் கொடுத்த வழிகாட்டி அஹ்மத் இப்னு மஸ்ஜித், சமூகவியலின் தந்தை அப்துர் ரஹ்மான் இப்னு கல்தூன் போன்ற பல்துறை அறிஞர்களின் மேதைகளினதும் உதயத்துக்குப் பாசறையாக அமைந்திருந்தவை மஸ்ஜித்களே என்பது வரலாற்று உண்மையாகும்.

அல்லாஹ்வின் கலிமாவை மேலோங்கச் செய்வதும், அதற்காகப் போராடுவதுமே அல்லாஹ்விடத்தில் மிக மேலான செயலாகும். சமூகத்தைக் 'குப்ர்" எனும் இருளிலிருந்து காப்பாற்றி 'இஸ்லாம்" எனும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதும் அநீதியிலிருந்து அவர்களை விடுவித்து நீதியின் பால் இட்டுச் செல்வதும் உண்மையில், ஏனைய அனைத்துக் காரியங்கள், செயல்களை விடவும் மேலானதே. நபிமார்கள், ரசூல்மார்களின் பணிகளில் இம்முயற்சியே பிரதான இடம் வகித்தது.

அவன்தான் உங்களை (ப் பாவத்தின்) இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன். (அல் ஹதீத் : 9)
ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக் மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான். (அத்தலாக் : 11)
உண்மையில் இஸ்லாத்தின் உயிரிய இக்கடமையை செயற்கொணர்ந்த அன்றைய போராட்ட வீரர்களான நபித்தோழர்களைப் பயிற்றுவித்து, பண்படுத்தி, பக்குவப்படுத்துவதில் மஸ்ஜித் மிகப் பெரிய பங்காற்றியிருந்தது. இஸ்லாம் கூறும் போராட்ட ஒழுங்குகள், நடைமுறைகள், நோக்கங்களை அவர்கள் கற்றுணர்ந்ததோடு, உளப்பயிற்சி, உடல் பயிற்சி என அனைத்தவிதப் பயிற்சிகளையும் மஸ்ஜித் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.

அத்துடன் அவர்களின் இராணுவத் தலைவராக களத் தளபதியாகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களும் கால, சூழல்களுக்கேற்ப கிடைக்கப் பெற்றமை அப்போராளிகளின் ஆன்மீகம் பக்குவத்தை இரட்டிப்பாக்கியதுடன், அவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய இலட்சியங்களையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்திற்று. இறுதிவரை புறமுதுகு காட்டாது நேருக்கு நேர் நின்றி சமர் செய்த அம்மகான்களின் தியாக வரலாறுகள் அவர்கள் அஞ்சா நெஞ்சங்களையும் பயிற்றுவித்தலின் சீரிய தன்மை, உறுதிப் பாட்டினையும் புலப்படுத்துகின்றன.

போராளி வீரம், தியாகம், துணிவு போன்ற கட்டாயப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். வெற்றிக்கு உறுதுணையாக அமையக் கூடிய சகோதரத்துவம், ஒற்றுமை, உடன்பாடு, புரிந்துணர்வு போராட்ட வீரர்களுக்கிடையில் இருக்க வேண்டியது மிக அவசியம். வகுப்புவாதம், பிரிவினை, சச்சரவு, குரோதம் என்பவற்றிலிருந்து அவர்கள் தூரமாக வேண்டும். ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உரிமை, கடமைகளில் சமமானவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கிடையில் மேலோங்கியிருப்பதுடன் அல்லாஹ்வின் அச்சம் அவர்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். சொல்லிலும், செயலிலும் தூய்மை, நேர்மை கமழ வேண்டும். அற்ப ஆசைகள் அவர்களைப் பீடிக்காது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் திருப்பொருத்தமே ஒவ்வொரு கணமும் அவர்களின் முழு இலட்சியமாக அமைய வேண்டும். இது போன்ற அனைத்துப் பண்புகளும் விசயங்களும் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

உண்மையில் மேற்குறித்த போராட்ட விதிகளும், ஒழுங்குகளும் அல்குர்ஆனை இலக்காகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட, மஸ்ஜிதை மையமாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்ட சமுதாயத்தில் மாத்திரமே தோன்ற முடியும்.
யுத்தக் கலைகளைப் பயிற்றுவிக்கும் தளமாகவும் நபி (ஸல்) அவர்களின் காலப்பகுதியில் மஸ்ஜித் திகழ்ந்தது. ஹபஷா வாசிகளில் பெருநாள் தினமன்று அன்றைய போராட்டங்ளில் உபயோகிக்கப்படும் ஒருவகைக் கூர்முனை ஆயுதங்களையும் கேடயங்களையும் பயன்படுத்தி மஸ்ஜிதில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஆயிஷா (ரலி) அவர்கள் அதனைக் கண்ணுற்ற போது நபி (ஸல்) அவர்கள் தனது தோட்புயங்களால் ஆயிஷா (ரலி) அவர்களை மறைத்ததாகவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.

மஸ்ஜிதுந் நபவியில் சில நபித்தோழர்கள் அம்புகள், ஈட்டிகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்ததாகவும் றபீதா அல்லது றுபைதா (ரலி) போன்ற நபித்தோழியர்கள் விஷேசமாக நிறுவப்பட்ட மஸ்ஜிதோடு இணைந்த கூடாரங்களில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தாகவும், ஹந்தக் போராட்டத்தில் காயமுற்ற அவ்ஸ் கோத்திரத் தலைவரான ஸஃது இப்னு முஆத் (ரலி) அவர்களுக்காக மஸ்ஜிதுக்கருகாமையில் கூடாரமொன்று அமைக்கப்பட்டதாகவும் இன்னும் சில அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்த நேர்வழி நடந்த கலீபாக்களின் காலங்களிலும் அதனைத் தொடர்ந்த காலப் பகுதிகளிலும் வாழ்வின் இலட்சியங்களை முழுமையாக அறிந்த, மரணத்தைத் துச்சமென மதிக்கக் கூடிய, உடலையும் பொருளையும் எவ்வேளையிலும் வழங்கத் தயாராகவுள்ள புனிதர்களையெல்லாம் மஸ்ஜித் தன்னகத்தில் பயிற்றுவித்து வெளியேற்றியிருந்தது.

உரோம, பாரசீக, தார்த்தாரியப் படையெடுப்புக்கள், சிலுவைப் போர்கள் போன்று இஸ்லாத்திற்கெதிரான பெரும் துன்பங்கள், கஷ்டங்கள் பீடித்த போதெல்லாம் அவற்றைப் பலமிழக்கச் செய்து அல்லாஹ்வின் தீனை நிலை நாட்டி, முஸ்லிம்கள் வெற்றி வாகை சூடக் காரணமாக அமைந்தவைகளில் மஸ்ஜிதின் பணி மகத்தானது என்பதை வரலாற்றுப் பக்கங்கள் நிரூபித்த வண்ணம் உள்ளன.

நவீன உலகில் அமுல்படுத்தப்படும் கொள்கைகளில், பல நாடுகள் சிறந்த ஆட்சியமைப்புக்கு உகந்ததாக கையாளும் சாதனங்களில், ''ஜனநாயகம்"" ஒன்றாகும். மனிதம் சுதந்திரமிழந்து உரிமைகளைப் பறிகொடுத்து அலையும் நிலை ஒரு புறமிருக்க, சுதந்திரம், உரிமைகள், கடமைகள் அனைத்தும் ஜனநாயகம் என்பதற்குள் புதைந்திருப்பதாகப் பொய்வாதம் புரியப்படுகின்றது. இதனால் தான், ''மக்களை, மக்களால் மக்களுக்காகச் செய்யப்படும் ஆட்சி"" எனும் முலாமிடப்பட்ட வரைவிலக்கணம் அதற்குக் கொடுக்கப்படுகின்றது. மக்களின் நலன்கனே அனைத்திலும் முன்னுரிமை எனும் கோட்பாட்டளவிலான கருத்தும் அதன் மூலம் முன் வைக்கப்படுகின்றது.

உண்மையில் ஜனநாயகம் எனும் பெயரைத் தாங்காத, அதனிலும் வித்தியாசமான, நடைமுறைச் சாத்தியமாக சிந்தனையாகப் 'பிரதிநிதித்துவம்" எனும் கிலாபத் கோட்பாட்டை இஸ்லாம் முன் வைத்துள்ளது. அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியது. பிரபஞ்சம் அனைத்துக்கும் சொந்தக் காரன் அவனே. சகல விதத்திலும் உயர்ந்து நிற்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட ஏகவல்லவன் அவன் மாத்திரமே. இவ்வேளை மனிதன் அவனின் பிரதிநிதியாக, அவனின் கட்டளைகளை நிபந்தனைகளுக்கேற்ப பூமியில் அமுல்படுத்துபவனாக அவனுக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஆட்சியை, கட்டுப்பாடுகளை மீறாத அரசைத் தோற்றுவிப்பவனாக இருப்பான் என்பதே இஸ்லாம் கூறும் கிலாபத் ஆகும்.

'உம் இறைவன் மலக்குகளை நோக்கி, நான் ஒரு பிரதிநிதியை பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்" என்று கூறிய அந்த நேரத்தை நினைவு கூறும்"". (2:30)
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;""... (அந்நூர் : 55)

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தெய்வீக, ஆனால் மனித செயற்பாடு கலந்த இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி செயலுருவில் கொண்டு வந்தார்கள். அவரைத் தொடர்ந்த நேர்வழி சென்ற கலீபாக்களும் இதனை அமுல்படுத்தியதன் மூலம் இஸ்லாம் அனைத்தையும் பொதிந்த, நடைமுறைக்கு உகந்த மார்க்கம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இந்த வகையில் மனித சுதந்திரம், நீதி, உரிமைகள் போன்ற சமுதாயத்துக்குரிய அனைத்து அடிப்படைகளையும் முதன் முதலில் முன் வைத்தது இஸ்லாமே.

இவ்வாறு நோக்குமிடத்து, இஸ்லாம் கூறும் ''கிலாபத்"" கொள்கைக்கும் மஸ்ஜிதின் இலட்சியங்களுக்குமிடையில் முரண்பாடுகள் இல்லை. பிரதிநிதித்துவத்தை ஆரம்பித்து, அதனைத் தூண்டி வளர்த்து விட்ட பெருமை மஸ்ஜிதையே முதலில் சாரும். கிலாபத்தின் ஆரம்பமும், முடிவும் மஸ்ஜிதாகத் தான் இருக்க முடியும்.

ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் அதன் மின்பரில், ''மனிதர்களே! நான் உங்களுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனூடாக நான் உங்களை விட உயர்ந்தவனல்லன். நான் செய்வது சரியானது எனில் எனக்கு உதவியாளர்களாக இருங்கள். தவறுவிடின் என்னைத் திருத்துபவர்களாக மாறுங்கள்"" எனக் கூறுமளவுக்கு மஸ்ஜித், அவர்களுக்கு ஆன்மீகப் பக்குவத்தை வழங்கியது.

''அல்லாஹ் மீது சத்தியமாக உங்களில் தவறைக் காணின் எங்கள் வாள்கள் உங்களைச் சீர் செய்யும்"" என மின்பரில் பிரசன்னமாயிருந்த கலீபாவின் முன் பொதுமகன் எழுந்து கூறும் உரிமைகளையும் பெற்றுள்ளான் என்ற இஸ்லாத்தின் கூற்றை நடைமுறைப்படுத்தியதும் மஸ்ஜிதே. இது போன்ற முன்மாதிரியான குடியுரிமையை மஸ்ஜித்களின் வரலாறு எடுத்தியம்புகின்றது.




Share your views...

0 Respones to "இஸ்லாமியச் சிந்தனை"

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed